பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்ப திட்டம்; இத்தாலியில் மாபியா கும்பல் தலைவன் கைது


பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்ப திட்டம்; இத்தாலியில் மாபியா கும்பல் தலைவன் கைது
x

இத்தாலி அரசால் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாபியா கும்பல் தலைவனை 100-க்கும் மேற்பட்ட சிறப்பு போலீஸ் படை சுற்றி வளைத்து, அதிரடியாக கைது செய்தது.



ரோம்,


இத்தாலி நாட்டில் ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய கொடூர குற்றவாளி மேட்டியோ மெஸ்சினா டினாரோ. மாபியா கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு எதிரியாக இருப்பவர்களை அதிரடியாக கொன்று குவிக்கும் வழக்கம் கொண்டவர். இதுவரை தெரிந்து 20-க்கும் மேற்பட்ட மாபியா இயக்கத்துடன் தொடர்புடைய நபர்களை கொல்ல உத்தரவிட்டு உள்ளார். இதற்காக பல வழக்குகளில் அவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும், போலீசில் சிக்காமல் தப்பி வந்துள்ளார் என சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இவற்றில் 1992-ம் ஆண்டில் மாபியா ஒழிப்புக்கான வழக்கறிஞர்கள் கியோவான்னி பேல்கோன் மற்றும் பாவ்லோ போர்செல்லினோ ஆகிய இருவரை கொலை செய்ததுடன் தொடர்புடையவர்.

1990-ம் ஆண்டின் இறுதியில் இத்தாலி நாட்டின் மிலன், புளோரென்ஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களில் பல குண்டுவெடிப்புகளை நடத்தியதற்காக சமீபத்தில் 2020-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

டினாரோவுக்கு எதிராக போலீசுக்கு தகவல் அளித்ததற்காக அவரது எதிரியின் 11 வயது மகனை கடத்தி சென்று, கொடுமை செய்து பின்னர் கொலை செய்த சம்பவத்திலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இவரை ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோபோல் என்ற அமைப்பும், மிக அதிகம் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைத்து உள்ளது.

30 ஆண்டுகளாக போலீசிடம் பிடிபடாமல் தப்பி வந்த அவர், சிசிலி தீவில் இருக்கும் தகவல் இத்தாலி போலீசாருக்கு சென்றது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் ராணுவ போலீஸ் பிரிவான கேராபைனையீரி உஷார்படுத்தப்பட்டது.

சிசிலியின் பாலெர்மோ நகரில் உள்ள தனியார் சுகாதார கிளினிக்கில் இருந்த அவரை 100-க்கும் மேற்பட்ட இத்தாலியின் சிறப்பு போலீஸ் படை சுற்றி வளைத்தது. அவர் தப்பி விடாமல் இருக்க போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

இதன்பின்னர், டினாரோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அந்த கிளினிக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக வந்திருக்க கூடும் என அரசு வழக்கறிஞர் மொரீசியோ டி லூசியா கூறியுள்ளார்.

30 ஆண்டுகளாக பிடிபடாமல் தப்பி வந்த மாபியா கும்பல் தலைவனை பிடித்ததற்காக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பாதுகாப்பு மந்திரி கைடோ கிராசெட்டோ உள்ளிட்டோர் மகிழச்சி தெரிவித்து உள்ளனர்.

அனைத்து போலீஸ் படையினருக்கும் கிடைத்த வெற்றியிது என்று தலைமை போலீஸ் அதிகாரி லம்பேர்ட்டோ கியான்னி கூறியுள்ளார். எனினும் பிரதமர் மெலோனி, மாபியாவுக்கு எதிரான போரில் இத்தாலி இன்னும் வெற்றி பெற்று விடவில்லை. ஆனால், மாபியாவை நாம் வீழ்த்தி இருக்கிறோம் என்று நமது குழந்தைகளிடம் கூறி கொண்டாடும் நாள் இது என்று கூறியுள்ளார்.


Next Story