குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - லூலூ குழும தலைவர் அறிவிப்பு


குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - லூலூ குழும தலைவர் அறிவிப்பு
x

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என லூலூ குழும தலைவர் தெரிவித்துள்ளார்.

துபாய்,

குவைத் நாட்டின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், 24 பேர் கேரளாவையும், 7 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்த ஊழியர்கள் பணியாற்றிய பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேபோல், தீ விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். அதேபோல் மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று லூலூ குழுமம் தெரிவித்துள்ளது. அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசப் அலி குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிவாரணத்தொகை கேரளாவின் நோர்கா அமைப்பு மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, துபாயில் வசிக்கும் மற்றொரு இந்திய தொழிலதிபரான ரவி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Next Story