ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு! வெளிநாட்டு சதி என ரஷியா குற்றச்சாட்டு
ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் 'நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2' எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
ரஷியா மீதான் பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா குறைத்தது. எனினும், அந்த குழாய்களில் எரிவாயு தேங்கி இருக்கிறது.
இந்நிலையில், ரஷியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் வகையில், கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களில் 4வது முறையாக சில பகுதிகளில் கசிவு உண்டானது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட திடீர் கசிவுக்கு வெளிநாட்டு அரசுகளின் சதி இருப்பதாக ரஷியா சந்தேகிக்கிறது.
ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும், இது அவசர விசாரணை தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.
ஒரு அரசின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற பயங்கரவாத செயல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் பல நாடுகளும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. கசிவுகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறதா என்று பதிலளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதிலளிக்காமல் இருந்தார்" என்றார்.
ரஷியா, அமெரிக்கா ஆகிய இரு வல்லரசுகளும் இந்த சதிச் செயல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளன. கசிவுகள் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
இப்போதைய சூழலில், ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் 'நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2' குழாய்கள் மூடப்பட்டுள்ளன.