ஒரு பணய கைதியை கடத்தினால்... லட்சக்கணக்கில் பணம், வீடு; ஆசை காட்டிய ஹமாஸ் அமைப்பு
பணய கைதிகளை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் அதற்கு ஈடாக லட்சக்கணக்கில் பணம், வீடு வழங்குவோம் என்று ஹமாஸ் அமைப்பு ஆசை காட்டியுள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், பணய கைதிகளை கடத்தி, காசாவுக்கு கொண்டு வருவதற்கு பயங்கரவாதிகளுக்கு ஹமாஸ் அமைப்பு ஆசை காட்டியுள்ளது. இதற்கு ஈடாக லட்சக்கணக்கில் பணம், வீடு ஆகியவை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
இதுபற்றி வெளியான வீடியோவில், பணய கைதிகளை காசாவுக்கு கடத்தி வாருங்கள் என்றும் அப்படி ஒரு பணய கைதியை கொண்டு வந்தால் அதற்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.8.3 லட்சம்) மற்றும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஊக்க தொகையாக வழங்கப்படும் என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆசை காட்டியிருக்கிறது.
இதனை ஹமாஸ் பயங்கரவாதி ஒருவர் வீடியோவில் கூறுவது கேட்கிறது. வீடுகளை காலி செய்து விட்டு, எவ்வளவு பேரை காசாவுக்கு கடத்தி கொண்டு வரமுடியுமோ அவ்வளவு பேரையும் கொண்டு வாருங்கள் என ஒரு பயங்கரவாதி கூறுகிறார்.
வீடியோவில், அவளுடைய நாய் வீட்டில் இருந்து வெளியே வந்தது. அதனை நான் சுட்டு கொன்றேன் என ஒரு பயங்கரவாதி கூறுகிறார். இதேபோன்று மற்றொரு பயங்கரவாதி, அவளுடைய உடல் தரையில் கிடந்தது. அதனையும் நான் சுட்டேன். அதற்கு தளபதி என்னை நோக்கி கத்தி, கூச்சலிட்டார். சடலம் மீது சுட்டு, குண்டுகளை வீணடிக்கிறாயே என கூறினார் என்று வீடியோவில் கூறுகிறார்.
ஹமாஸ் பயங்கரவாதி ஒருவர் வீடியோவில் கூறும்போது, எதற்காக நாங்கள் வந்தோமோ அதனை முடித்து விட்டோம். 2 வீடுகளை எரித்து விட்டோம் என கூறுகிறார்.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி நடந்து வரும் விசாரணையில் பல விசயங்கள் வெளிவருகின்றன என ஐ.டி.எப். வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரை கொலை செய்யவும், கடத்தி வரவும் ஹமாஸ் அமைப்பு அறிவுறுத்தல்களை வழங்கிய தகவலை, பயங்கரவாதிகள் அந்த வீடியோ பதிவில் தெளிவாக பகிர்ந்து உள்ளனர்.
அந்த அமைப்பின் மூத்த தளபதிகள் பாதுகாப்பாக வீடுகளில் பதுங்கி கொண்டதுடன், ஆயுதமேந்திய நபர்களை போரிடவும், உயிரிழக்கவும் அல்லது இஸ்ரேலில் கைது செய்யப்படவும் அனுப்பி உள்ளது என்று ஐ.டி.எப். தெரிவித்து உள்ளது.