ஆப்கானிஸ்தான்; கல்வி நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் : இந்தியா கடும் கண்டனம்


ஆப்கானிஸ்தான்;  கல்வி நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் : இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 1 Oct 2022 10:16 AM IST (Updated: 1 Oct 2022 10:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி மையம் கல்லூரி நுழைவு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள உதவுகிறது. நேற்று இந்த கல்வி மையத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது.

இதையொட்டி உள்ளூரை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் கல்வி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனிடையே குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலீபான் வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story