அணு உலை குளிர்விக்கும் கோபுரத்தில் குதித்து...!! சாதனை வீடியோவை வெளியிட்ட இளைஞர்
10.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
நியூயார்க்,
இளம் தலைமுறையினர் சாகசங்கள், சாதனைகளை படைப்பதற்கான ஆர்வம், உத்வேகத்துடன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்து என்று தெரிந்தும், ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போன்று என கூறி விட்டு சாகசங்களில் ஈடுபட தயாராகி விடுகின்றனர்.
இந்த நிலையில், 21 வயது தடகள வீரர் ஒருவர் புதிய சாதனை ஒன்றை படைக்க தயாரானார். இதற்காக அவர் உடலில் பாராசூட்டை கட்டி கொண்டு அந்த பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார்.
அந்த கோபுரத்தின் மேல்முனை பகுதிக்கு சென்று நின்றபடி உள்ளே பார்க்கிறார். பின்பு குதிப்பதற்காக தயாராகிறார். இதனை தொடர்ந்து சட்டென்று, கோபுரத்தின் உள்ளே குதிக்கிறார். தரையை தொட சில விநாடிகள் இருக்கும்போது, தன்னுடைய பாராசூட்டை விடுவிக்கிறார். அவர் பறந்து சென்று தரையை அடைகிறார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றை ஜியோ மாஸ்டர்ஸ் என்ற பெயரில் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 10.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
இதேபோன்று மற்றொரு வீடியோவில் அவர் உள்ளே குதிக்கும் காட்சிகள் பல்வேறு பரிமாணங்களில் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி விமர்சகர் ஒருவர், சற்று பொறுங்கள். அவர் எப்படி வெளியேறினார்? எங்கே அவர் தரையிறங்கினார்? எனக்கு பல கேள்விகள் உள்ளன என தெரிவித்து உள்ளார். மற்றொருவர், பாராசூட் திறக்கும்போது ஏற்படும் சத்தம் பித்துப்பிடிக்க வைக்கிறது என தெரிவிக்கிறார்.
இதேபோன்று இன்னொருவர், நம்முடைய தலைமுறையின் காட்டுமிராண்டி நபர் என்று தெரிவித்து உள்ளார். அந்த சாதனை படைத்த நபருக்கு 3.1 லட்சம் பின்பற்றுவோர்களும், யூ-டியூபில் 6.2 லட்சம் பின்பற்றுவோர்களும் உள்ளனர்.
அணு உலை குளிர்விக்கும் கோபுரம் 200 மீட்டர் உயரம் வரைக்கும் அமைக்கப்பட கூடியது. இதில் நீரானது குளிர்விக்கப்பட்டு, காற்றில் வெப்பம் வெளியிடப்படுகிறது. உட்புறம் வளைவை கொண்ட ஒரு பெரிய அமைப்பாக இந்த குளிர்விக்கும் கோபுரம் வடிவம் கொண்டிருக்கும்.