எகிப்து: மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை
எகிப்து நாட்டில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ,
எகிப்து நாட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அய்மான் ஹகாக். இவரது மனைவி ஷாய்மா கமால். இவர் டி.வி. பிரபலம் ஆவார். அய்மான் ஹகாக் தனது மனைவியை நண்பர் எல் கராப்லி என்பவருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து புதைத்து விட்டார்.
ஆனால் போலீசில், தன் மனைவியை காரில் அழைத்துச்சென்று கெய்ரோவில் ஒரு வணிக வளாகத்தில் கொண்டு போய் விட்டதாகவும், அவர் வீடு திரும்பவில்லை என்றும் புகார் செய்து நாடகமாடினார்.
ஆனால் போலீஸ் விசாரணையில், தன்னைப்பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியபோதுதான் மனைவியை நைசாக கிசாவில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு பண்ணைக்கு நீதிபதி அய்மான் ஹகாக் அழைத்துச்சென்று, அங்கு அவரை கைத்துப்பாக்கியால் சுட்டதும், தனது நண்பர் எல் கராப்லியை மனைவியை பிடித்துக்கொள்ளச்செய்து, ஒரு துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், அவரது உடலை நைட்ரிக் அமிலத்தை ஊற்றி சிதைத்து, பின்னர் புதைத்ததும் அம்பலத்துக்கு வந்தது. இந்த வழக்கில் மனைவியின் கழுத்தை நெரிக்க நீதிபதி அய்மான் ஹகாக் பயன்படுத்திய துணியை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில், அந்தத் துணியில் நீதிபதி மற்றும் அவரது நண்பரது கைரேகைகள் பதிந்திருப்பது தெரியவந்தது.
மேலும் ஷாய்மாவின் உடலை எரித்துச் சிதைப்பதற்கு நைட்ரிக் அமிலமும், புதைக்க மண்வெட்டியும் வாங்கியதை கடைக்காரர் உறுதி செய்து சாட்சியம் அளித்ததும், நீதிபதியும் அவரது நண்பரும் இந்த வழக்கில் வசமாய் சிக்குவதற்கு வழிவகுத்து விட்டன.
இந்த வழக்கில் நீதிபதி அய்மான் ஹகாக் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்து புதைத்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து கெய்ரோ கோர்ட்டு நீதிபதி அய்மான் ஹகாக்குக்கு மரண தண்டனை விதித்து நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதியின் நண்பருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 11-ந் தேதி தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.