அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஒன்றிணைந்த செயல்பாடு - அமெரிக்கா, பிரேசில் அதிபர்கள் ஒப்புதல்


அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஒன்றிணைந்த செயல்பாடு - அமெரிக்கா, பிரேசில் அதிபர்கள் ஒப்புதல்
x

அமேசான் காடுகள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்கா-பிரேசில் அதிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

வாஷிங்டன்,

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான 'அமேசான்' தென் அமெரிக்காவின் பிரேசில், பொலிவியா, பெரு, ஈகுவேடார், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. பல அரிய வகை மரங்களையும், உயிரினங்களையும் கொண்டுள்ள இந்த மழைக்காட்டில், சுமார் 500 வகையான பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக சுரங்க நடவடிக்கைகள், காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியிலும் 1.5 ஏக்கர் அளவிலான அமேசான் காடு அழிக்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

மேலும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலின் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரேசில் அரசை எதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, அமேசான் காடுகளை மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், உக்ரைன் போர் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story