நேட்டோ உச்சி மாநாட்டுக்கு முன்னர் இங்கிலாந்து சென்றுள்ள ஜோ பைடன் - உக்ரைன் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
லண்டன்,
நேட்டோ உச்சி மாநாட்டுக்காக லிதுவேனியா செல்லும் வழியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்து சென்றார். அங்கு உக்ரைன் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
இது முழுமையான அரசுமுறை பயணம் இல்லை என்றாலும் அங்குள்ள விண்ட்சர் கோட்டையில் சென்று மன்னர் மூன்றாம் சார்லசை அவர் சந்திக்க உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு மன்னர் சார்லசை ஜோ பைடன் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் அலுவலகத்தில் வைத்து பைடன் சந்திக்க உள்ளார். அப்போது உக்ரைன் போர் நிலவரம், நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை மையமாக வைத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மற்ற நாடுகளை விட அமெரிக்காவும், இங்கிலாந்தும் பல்வேறு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி உள்ளன. இந்த நிலையில் தற்போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது நேட்டோ உச்சி மாநாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.