ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானிஸ்தானில் உள்ளார்- பாகிஸ்தான் மந்திரி தகவல்
மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு கடிதம் எழுதியது. மசூத் அசார் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் அல்லது கன்ஹார் பகுதிகளில் இருக்கலாம் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருந்தார்.
இதை மறுக்கும் வகையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று தெரிவித்துள்ளார். மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதை தலீபான்கள் மறுத்த சூழலில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு மந்திரி பிலாவல் கூறுகையில், "ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் உள்ளார். மசூத் அசார் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மட்டும் பிரச்சினை இல்லை. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்கும் இடையே அவர் முத்தரப்பு பிரச்சினையாக மாறியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.