'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி
‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
'சாட்-ஜிபிடி' எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவு, சாதகமா பாதகமா என்பதுதான் இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 'ஓபன் ஏஐ' என்ற நிறுவனத்தின் படைப்பான 'சாட்-ஜிபிடி' கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது உலகளவும் லட்சக்கணக்கான மக்கள் 'சாட்-ஜிபிடி'யை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் சாட்-ஜிபிடி வருகையால், சில துறைகளில் வேலைவாய்ப்பு பறிபோகும் அச்சமும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கற்றல் மற்றும் சிந்தனை திறன் இல்லாமல் போகும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அமெரிக்காவும், கனடாவும் கல்வித் துறையில் சாட்-ஜிபிடியைத் தடை செய்துள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி நாடு முழுவதும் 'சாட்-ஜிபிடி'க்கு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.
'சாட்-ஜிபிடி' அதன் பயனர் தரவுகளை பாதுகாப்பது இல்லை என்பதாலும், பயனர் வயதை சரிபார்ப்பதில்லை என்பதாலும் தற்காலிகமாக அதன் பயன்பாட்டை முடக்குவதாக இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.