முக்கிய உறுப்பினர் விலகல் எதிரொலி.. போர் கேபினட்டை கலைத்தார் நெதன்யாகு
காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் அமைக்கப்பட்டிருந்தது.
டெல் அவிவ்:
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக, ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். காசா மீதான தாக்குதல் இஸ்ரேலின் முழு ஒத்துழைப்பு மற்றும் சம்மதத்துடன் நடைபெற வேண்டும் என பிரதமர் நெதன்யாகு விரும்பினார். இதனால் போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் அமைக்கப்பட்டது. இதற்கு நெதன்யாகு தலைமை தாங்கினார்.
இந்த நிலையில் போர் கேபினட் இன்று கலைக்கப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். கேபினட்டில் இருந்து முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோர் வெளியேறிய நிலையில், நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார்.