சீனாவில் இஸ்ரேல் தூதரக ஊழியருக்கு கத்திக்குத்து
சீனாவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்,
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த தனது நிலைப்பாட்டை சீன அரசு அறிக்கையாக வெளியிட்டது. அதில் போர் இன்னும் தீவிரமடையலாம் என்பதால் கவலை கொள்வதாகவும், அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும் சீனா கூறியிருந்தது.
சீனாவின் இந்த அறிக்கை இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சீனா தனது அறிக்கையில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும் ஹமாஸ் அமைப்பை கண்டிக்கவில்லை என இஸ்ரேல் விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் சீனாவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த தூதரக ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த கத்திக்குத்து தாக்குதல் எங்குநடந்தது, தாக்குதல் நடத்திய நபர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதே சமயம் இந்தத் தாக்குதல் இஸ்ரேல் தூதரக வளாகத்தில் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.