லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு


லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2023 9:40 AM IST (Updated: 12 Oct 2023 11:12 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இரு தரப்புக்கு இடையேயான போர் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் சேர்த்து கிட்டத்தட்ட 3,600 பேர் பலியாகியுள்ளனர். போரினால் காசா முனையில் இருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Live Updates

  • 12 Oct 2023 11:51 AM IST

    150- பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் கூறும் போது, “பெண்கள், குழந்தைகள் உள்பட  150 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ளது. ஹமாசிடம் உள்ள பிணை கைதிகளை மீட்க உதவுவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  • 12 Oct 2023 11:30 AM IST

    போர் விதிகளை பின்பற்றுங்கள்- இஸ்ரேலுக்கு ஜோ பைடன் வலியுறுத்தல்

    ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதனால், ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தரைவழி தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்,  போர் விதிகளை பின்பற்றி  ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலை  இஸ்ரேல் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

  • 12 Oct 2023 10:18 AM IST

    ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப் பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு தெரியாமல் ஆயுதங்களை கொண்டு செல்ல இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்தனர். இதனால், சுரங்கப்பாதைகளை தகர்த்து ஹமாஸ் அமைப்பினரை பலவீனப்படுத்தும் வியூகத்துடன் இஸ்ரேல் தற்போது தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

  • 12 Oct 2023 9:56 AM IST

    அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு இருந்தால் தங்கள்  பயண திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் காசா நகருக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்கும் படியும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  • 12 Oct 2023 9:47 AM IST

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை பூமியில் இருந்தே துடைத்தெறிவோம் என்று உறுதிபட கூறியுள்ளது.


Next Story