இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் பயங்கர மோதல் - காசா நகர் மீது சரமாரி குண்டு வீச்சு


இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் பயங்கர மோதல் - காசா நகர் மீது சரமாரி குண்டு வீச்சு
x

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் நடைபெற்ற மோதலில் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது.

ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதி இருநாட்டு மோதலுக்கான மையப்புள்ளியாக உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் மேற்கரை பகுதியில் உள்ள அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் புகுந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போராக வெடித்தது. பின்னர் சர்வதேச நாடுகளின் முயற்சியால் 11 நாட்களுக்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் நகரங்கள் மீது டஜன் கணக்கான ராக்கெட்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை தொடுத்தது. அண்டை நாடான லெபனானிலும் ஹமாஸ் போராளிகள் இருப்பதால் அங்கும் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக காசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் அந்த நகரம் பற்றி எரிந்தது. வானுயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன.

இதனால் காசா நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தெரியவில்லை.

இதனிடையே இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


Next Story