காசாவின் மைய பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் மறுப்பு
தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது.
டெல் அவிவ்,
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 16 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் கொடூரமான தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் என 1,400 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் கொதித்தெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது.
இருதரப்புக்கும் இடையிலான இந்த போர் 2-வது மாதத்தில் நுழைந்துள்ளது. போரை நிறுத்தும்படி உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை மறுத்து வருகிறார்.
இந்தநிலையில், இஸ்ரேலின் தரை படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
"தரைவழியாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் ராணுவ படைகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்துள்ளது. அங்கு, ஹமாஸ்களை சுற்றி வளைத்து ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் குழு ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்க தொடங்கியுள்ளோம். சுமார் 100 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்" என்றார். ஆனால் ஹமாஸ் அமைப்பு இதனை மறுத்துள்ளது.