89 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிடம் ஒப்படைத்தது இஸ்ரேல்


89 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிடம் ஒப்படைத்தது இஸ்ரேல்
x

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்கள் வரிசை எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியதாக காசா அரசு ஊடக அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. முன்னர் இஸ்ரேலின் வசம் இருந்த இந்த உடல்கள், தெற்கு காசா பகுதியில் உள்ள கெரெம் ஷாலோம் வழியாக சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தால் வழங்கப்பட்டதாக பெயர் வெளியிடாத பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. வரிசை எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் உடல்களின் தோற்றம், கொல்லப்பட்ட இடங்கள் பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story