லெபனான் மீதும் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்
காசாவை தொடர்ந்து அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து உள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், லெபனானில் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இது இஸ்ரேலுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானும், தெற்கு பகுதியில் காசாவும் உள்ளன.
இந்த நிலையில், லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடுத்து உள்ளது. காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், மருந்துகள் இல்லாத சூழலில், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தவித்து வருகின்றனர்.
காசாவில் 10 மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் நீடிக்கும். இதனால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. காசாவில் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழலில், மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலின் தெற்கே யஹுடா ஹலேவி பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்தன. காசாவில் இஸ்ரேலிய படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.