லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு


தினத்தந்தி 9 Oct 2023 2:17 AM GMT (Updated: 9 Oct 2023 6:51 PM GMT)

காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஜெருசலேம்,


Live Updates

  • 9 Oct 2023 10:57 AM GMT

    இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை சரிசெய்து அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் நாளை அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பாரெல் கூட்டியிருக்கிறார். 

  • 9 Oct 2023 10:54 AM GMT

    அப்பாவி மக்களை காக்க வேண்டும்: ஐ.நா.சபை

    இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும்  ஐ.நா. தெரிவித்துள்ளது.

  • 9 Oct 2023 10:37 AM GMT

    காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் இஸ்ரேல்  ராணுவ  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • 9 Oct 2023 10:34 AM GMT

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தொடர்பா? ஈரான் மறுப்பு

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு ஈரானின் பங்கு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நசீர் மனானி தெரிவித்தார். மேலும், ஈரானின் எந்த உதவியும் இல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கும் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான ஆற்றல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

  • 9 Oct 2023 10:27 AM GMT

    இஸ்ரேல்-ஹமாஸ் வன்முறையில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை எதிர்ப்பதாகவும், மக்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

  • 9 Oct 2023 10:27 AM GMT

    காசா முனையில் இருந்து வெளியேறிய 123,000 மக்கள்: ஐ.நா. தகவல்

    போர் உக்கிரமாக நடப்பதால் காசா முனையில் இருந்து இதுவரை 123,538 மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வீடுகளை அழிப்பதாலும், பயம், பாதுகாப்பு குறித்த கவலை காரணமாகவும் அவர்கள் வெளியேறியிருப்பதாகவும், 73,000க்கும் அதிகமானோர் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

  • 9 Oct 2023 9:10 AM GMT

    இஸ்ரேலில் நடைபெற்று வரும் போரில் கேரள பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

  • 9 Oct 2023 8:18 AM GMT

    துப்பாக்கிச்சண்டை நீடிப்பு:-

    காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், டிரோட் ஆகிய 3 நகரங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 3வது நாளாக துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.

  • 9 Oct 2023 6:35 AM GMT

    காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு...!

    காசா முனை எல்லையில் இஸ்ரேல் 1 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. காசாவின் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், கட்டிடங்கள் மீது வான்வழி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசா எல்லையில் ராணுவ டாங்கிகள், ஆயுதங்களுடன் 1 லட்சம் இஸ்ரேலிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 9 Oct 2023 5:25 AM GMT

    இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தாய்லாந்து நாட்டினர் 12 பேர் பலி

    இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் காயமடைந்தனர். மேலும், தங்கள் நாட்டினர் 12 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைகைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.


Next Story