இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடந்து வருகிறது.
ஜெருசலேம்,
Live Updates
- 13 Oct 2023 9:45 PM IST
காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக வெஸ்ட் பேங்க் நகரில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 13 Oct 2023 8:16 PM IST
காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கை, காசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைப் போன்றது என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
- 13 Oct 2023 7:27 PM IST
காசாவிற்குள் தரை வழி தாக்குதலை தொடுக்க இருப்பதால் தெற்கு பகுதியில் இருந்து மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்து இருந்தது. இஸ்ரேல் ராணுவம் விதித்த 24 மணி நேர கெடு நெருங்கி வரும் நிலையில், காசா முனையில் இருந்து மக்கள் பலரும் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேற தொடங்கியுள்ளனர்.
- 13 Oct 2023 6:43 PM IST
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸ்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
- 13 Oct 2023 5:51 PM IST
இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பதிலடி நடவடிக்கையாக சுமார் 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
- 13 Oct 2023 5:36 PM IST
தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ரஷிய அதிபர் புதின் கோரிக்கை விடுத்துள்ளார். கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக புதின் கவலை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.
- 13 Oct 2023 4:04 PM IST
பாலஸ்தீன அதிபரை அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசினார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
- 13 Oct 2023 2:29 PM IST
சீனாவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த இஸ்ரேலிய தூதரக அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 13 Oct 2023 1:42 PM IST
இஸ்ரேல் தாக்குதலில் பிணைக்கைதிகள் 11 பேர் உயிரிழந்துவிட்டனர் - ஹமாஸ்
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பிணைக்கைதிகள் 11 பேர் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடக்கம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து 150க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 Oct 2023 1:19 PM IST
வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் - பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் வேண்டுகோள்
24 மணி நேரத்தில் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறி தெற்கு பகுதிக்கு செல்லவேண்டுமென இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் என பாலஸ்தீன மக்களுக்கு ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இஸ்ரேல் எச்சரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.