இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்


இஸ்ரேல்-ஹமாஸ் போர்:  ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
x
தினத்தந்தி 19 Oct 2023 3:03 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பு தகர்க்கப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

Live Updates

  • 19 Oct 2023 5:13 AM IST

    இஸ்ரேல் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - காசாவுக்கு ரூ.832 கோடி நிதியுதவி

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்வார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

    அதன்படி ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நேரில் வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேட்டன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    காசாவுக்கு ரூ.832 கோடி நிதியுதவி

    அப்போது ஜோ பைடன் பேசுகையில், “நேற்று காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது, நீங்கள் (இஸ்ரேல்) அல்ல” என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், “ஒரு எளிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். தீமைகள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும்.

    உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. மேலும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்” என்றார்.

    மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார்.

    ஜோ பைடனின் சந்திப்பு ரத்து

    அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்கு பெஞ்சமின் நேட்டன்யாகு நன்றி தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என விவரித்தார். மேலும் இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இதனிடையே போரில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைக்கோர ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாட்டை நடத்த இருந்தார்.

    ஆனால், காசா ஆஸ்பத்திரி மீது நடந்த குண்டுவீச்சின் காரணமாக ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதை ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மன் சபாதி தெரிவித்தார்.

    போர்க்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா

    இதனிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் மேலும் சில போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கப்பல்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்துக்கு அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  • 19 Oct 2023 4:59 AM IST

    லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் - அமெரிக்கர்களுக்கு அறிவுரை

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    நேற்று லெபனான் எல்லையை ஒட்டி இருக்கும் இஸ்ரேலிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலர் பலியானதாகவும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக விளக்கம் அளிக்கவில்லை.

    இதனிடையே இஸ்ரேல்-லெபனான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  • 19 Oct 2023 4:48 AM IST

    காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழியும் இஸ்ரேல் ராணுவம்

    காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள போதிலும், இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தெற்கு காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலா, ரபா, கான் யூனிஸ் மற்றும் வடக்கு காசாவின் ஜபாலியா, அல்-கசாசிப் மற்றும் ஹலிமா அல்-சாடியா ஆகிய நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாகவும், இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 80-க்கும் அதிகமானோர் பலியானதாகவும் காசா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் பலியானதாகவும், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர தாக்குதல்களில் 1,500-க்கும் அதிகமான ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

    அந்த வகையில் 12 நாட்களாக நடந்து வரும் போரில் காசா தரப்பில் மட்டும் சுமார் 5,500 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேர் பலியாகியுள்ளனர்.

  • 19 Oct 2023 4:05 AM IST

    போர் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது - போப் ஆண்டவர் 

    காசாவில் நடந்து வரும் மனிதாபிமானப் பேரழிவுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், “பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இருவரையும் பற்றி நான் யோசிக்கிறேன். காசாவின் நிலைமை அவநம்பிக்கையானது. போர் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது, வெறுப்பை அதிகரிக்கிறது, பழிவாங்கலைப் பெருக்குகிறது. ஆயுதங்களை அமைதிப்படுத்துங்கள். ஏழைகள், மக்கள், குழந்தைகளின் அமைதிக்கான முழக்கத்தைக் கேளுங்கள்” என கூறினார்.

  • 19 Oct 2023 3:37 AM IST

    காசாவில் ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டனம்

    காசாவில் ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஜோர்டான், எகிப்து, சவுதிஅரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை வன்மையாக கண்டித்துள்ளன.

    அதுமட்டும் இன்றி ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் காசாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா. சபையிடம் 22 அரபு நாடுகள் வலியுறுத்தின.

  • 19 Oct 2023 3:05 AM IST

    காசா ஆஸ்பத்திரி மீது குண்டு வீச்சு: இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டு

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7-ந் தேதி பெரிய அளவில் போர் வெடித்தது.

    இரு தரப்புக்கும் இடையில் ஏற்கனவே 5 முறை போர் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட தற்போதைய போர் மிகவும் கொடூரமானதாக மாறி வருகிறது.

    போரை உடனடியாக நிறுத்த இரு தரப்பையும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது.

    இந்த நிலையில் காசாவில் உள்ள மீது ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    காசா சிட்டியில் உள்ள அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் தாக்குதலுக்கு பயந்து தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் என 500 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

    ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியதாக காசா தரப்பில் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் அரசு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    மேலும் காசாவில் இருக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு ஒன்று இஸ்ரேலை நோக்கி வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக ஆஸ்பத்திரியில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் ஆஸ்பத்திரி மீதான தாக்குதல் குறித்து ஹமாஸ் போராளிகள் இருவர் பேசிய ஆடியோ பதிவு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பேசும் ஹமாஸ் போராளிகள் ஆஸ்பத்திரி மீதான தாக்குதல் பயங்கரவாத அமைப்பின் தவறுதலான குண்டு வீச்சு என நம்புவதாகவும், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டின் சிதைவுகள் இஸ்ரேலிய ஆயுதங்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்.

    இதனிடையே இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா ஆஸ்பத்திரியை தாக்கியவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அல்ல. காசாவில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் தான் என்பதை உலகம் அறியும். எங்கள் குழந்தைகளை கொடூரமாக கொன்றவர்கள், அவர்களின் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

    ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பந்தப்பட்ட பாலஸ்தீன அமைப்பு, “இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட ஆடியோ பொய்யானது. இஸ்ரேல் கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சிக்கிறது” என சாடியது.

    அதேபோல் காசா ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார்.


Next Story