வான்வெளிக்குள் ஊடுருவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் இருந்து வான்வெளி ஊடுருவல் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான ராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்தது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் (Ma'alot-Tarshiha) வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.