ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு.. 27-ம் தேதி தேர்தல்: பிரதமர் ஷிகெரு இஷிபா அதிரடி


ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு.. 27-ம் தேதி தேர்தல்: பிரதமர் ஷிகெரு இஷிபா அதிரடி
x

ஷிகெரு இஷிபா பிரதமர் ஆவதற்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது திட்டங்களை அறிவித்தார்.

டோக்கியோ,

ஜப்பானில் தாராளவாத ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். கடந்த 2021-ல் புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இவரது அரசாங்கத்தின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் மூன்று ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (வயது 67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து, விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்தார். வரும் 27-ந்தேதி தேர்தலை நடத்த உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி, ஜப்பான் நாடாளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்டபடி 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார். அவரது ஆட்சிக்காலம் 9 நாளில் முடிவுக்கு வந்துள்ளது.

கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரதமர் ஆவதற்கு முன்பே இஷிபா, நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது திட்டங்களை அறிவித்தார். இன்று மாலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு தேர்தல் தேதி மற்றும் பிரசாரம் தொடங்கும் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என்று இஷிபா, செய்தியாளர்களிடம் கூறினார். கீழ்சபை கலைக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு, பேரிடர் மீட்பு மற்றும் பணவாட்டத்தை கையாள்வதில் அரசாங்கம் முழுமையாக செயல்பட வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கொள்கைகளை விட தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் சிறிய அளவில் விவாதத்தை அனுமதிப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.


Next Story