ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்


ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்
x

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில். ஹமாஸ் பிடியில் இருந்த பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் 100க்கும் மேற்பட்டோர் காசாவில் ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவுடன் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். லெபனானில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு செயல்பட்டு வரும் நிலையில் நாட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கிருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அவ்வப்போது டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் நகரில் மஜ்தல் ஷம்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.





ஹிஸ்புல்லா தாக்குதலில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் 12 பேர் உயிரிழந்த சம்பவம் இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை கொடுக்காத விலையை ஹிஸ்புல்லா கொடுக்கும்' என்றார். அதேபோல், இஸ்ரேல் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லா அனைத்து சிவப்பு கோடுகளையும் (Red Line) தாண்டிவிட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தற்போது தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்பட இஸ்ரேல் அரசில் உள்ள முக்கிய நபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கால்பந்து மைதானம் மீதான தாக்குதல் நடந்த பின்னர் லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

அதேவேளை, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. ஏற்கனவே காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இறங்கியுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு எதிராவும் போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தலாம். மேலும், ஈரானும் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த கிளர்ச்சிக்குழுக்களுக்கு அதிக ஆயுதங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் மத்திய கிழக்கில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும். அதேவேளை, லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தடுக்குமாறு அமெரிக்காவிடம் லெபனான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் போர் விரிவாகும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story