ஹிஜாப் இன்றி செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை - ஸ்பெயின் பிரதமருடன் சந்திப்பு
ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
மாட்ரிட்,
ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாஷா அமெய்னி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமெய்னி, மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு சர்வதேச அளவில் பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கணை சாரா, கடந்த டிசம்பர் மாதம் கஜகஸ்தானில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் இன்றி விளையாடினார். அவரது இந்த செயலுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் நாட்டிற்குள் நுழையக் கூடாது என மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ள சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் ஹிஜாப் அணியவில்லை. சாராவுடன் இணைந்து செஸ் விளையாடிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ, அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், விளையாட்டு வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவு எப்போது உண்டு என்றும் தெரிவித்தார்.