சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு நிலத்தை பரிசாக வழங்கிய ஈரான்


சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு நிலத்தை பரிசாக வழங்கிய ஈரான்
x

கோப்புப்படம்

சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு ஈரான் அரசு நிலத்தை பரிசாக வழங்கி உள்ளது.

டெஹ்ரான்,

இந்தியாவில் பிறந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய, 'சாத்தானின் வேதங்கள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த 1989-ல், ஈரானின் அப்போதைய மூத்த மத தலைவர் கொமேனி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதிக்கும், 'பாத்வா' உத்தரவு பிறப்பித்தார்.

ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு பரிசு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கொமேனி உயிரிழந்த பின்னர் ஈரான் அரசு அந்த 'பாத்வா' உத்தரவை திரும்பப்பெற்றது. ஆனாலும் சல்மான் ருஷ்டியின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்ததது.

இந்தநிலையில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சல்மான் ருஷ்டியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

தீவிர சிகிச்சைக்கு பின் அவரது உடல் நலம் தேறினாலும், சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை செயல் இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சல்மான் ருஷ்டியை தாக்கிய அமெரிக்க இளைஞருக்கு ஈரான் 1,000 ச.மீ. நிலத்தை பரிசாக வழங்கியுள்ளது. இதுபற்றி ஈரானில் 'பாத்வா' உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பின் செயலர் முகமது இஸ்மாயில் ஜரெயி கூறுகையில், "சல்மான் ருஷ்டிக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது. தற்போது அவர் உயிருடன் இருந்தும் பயன் இல்லை. அவருக்கு தண்டனை விதித்த இளைஞருக்கு, 1,000 ச.மீ. விவசாய நிலம் பரிசாக அளிக்கப்படும். அவர் இல்லாவிட்டால், அவரது வாரிசுக்கு இந்த நிலம் தரப்படும்" என்றார்.

சல்மான் ருஷ்டியை தாக்கிய அமெரிக்க இளைஞர் ஹாதி மாதர் (வயது 24) தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story