இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதில் இரட்டை நிலைப்பாட்டில் ஈரான்
இஸ்ரேலுக்கு வெளியே அமைந்துள்ள மொசாட் அமைப்பின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி ஈரான் அதிபர் பெஜஸ்கியான் வலியுறுத்தி உள்ளார்.
தெஹ்ரான்,
ஈரானின் புதிய அதிபராக மசூத் பெஜஸ்கியான் சமீபத்தில் பதவியேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ஈரானின் இறையாண்மையை மீறிய செயல் என அந்நாடு ஒரு புறம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படை (ஐ.ஆர்.ஜி.சி.) வீரர்கள், டெல் அவிவ் நகரம் மற்றும் இஸ்ரேலின் பெரிய நகரங்கள் மீது நேரடியான மற்றும் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளது.
ஆனால், ஐ.ஆர்.ஜி.சி. ஆதரவுடன் அதிபராகியுள்ள பெஜஸ்கியானோ, இஸ்ரேலுக்கு வெளியே அமைந்துள்ள மொசாட் அமைப்பின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி வலியுறுத்தி உள்ளார். அதிலும், அஜர்பைஜான் குடியரசு மற்றும் ஈராக்கி குர்திஸ்தான் உள்ளிட்ட அண்டை பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த கூறியுள்ளார்.
இதனால், இஸ்ரேலுடனான முழு அளவிலான போருக்கான ஆபத்து குறையும் என்று அவர் நம்புகிறார். இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு நேரடி தாக்குதலும், ஈரானுக்கு எதிரான கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அவர் அஞ்சுகிறார் என அவருடைய நெருங்கிய உதவியாளர், தி டெலிகிராப் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.