மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு என குற்றச்சாட்டு.. ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு என குற்றச்சாட்டு.. ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 29 Jan 2024 4:22 PM IST (Updated: 29 Jan 2024 5:51 PM IST)
t-max-icont-min-icon

2022 -ம் ஆண்டில், ஈரானுக்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஒரு குழு அகற்றப்பட்டதாக ஈரான் கூறியது.

தெஹ்ரான்:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. தங்கள் நாடுகளை உளவு பார்ப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக, இஸ்ரேல் தனது மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரானைக் கருதுகிறது. ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறது. ஈரான் அரசாங்கமோ, அணு ஆயுத குற்றச்சாட்டை மறுப்பதுடன், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுப்போம் என்கிறது.

இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறி ஈரான் அரசு அவ்வப்போது கைது நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் மரணதண்டனைகளை நிறைவேற்றுகிறது.

அந்த வரிசையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாசவேலைக்கு திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.

2022-ம் ஆண்டில் ஈரானின் ராணுவ அமைச்சகத்திற்கு சொந்தமான ஒரு தொழிற்சாலையை தாக்க திட்டமிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில், ஈரானுக்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட, மொசாட்டுடன் தொடர்புடைய ஒரு குழு அகற்றப்பட்டதாக ஈரான் கூறியது. மேலும் அந்த குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story