16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாத ஐபோன்
விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றிலிருந்து அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'போயிங் 737 மக்ஸ்' ரக விமானம் ஒன்று கடந்த 5 ஆம் தேதி புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்ற போது திடீரென ஜன்னல் உடைந்து பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் நடுவானில் ஜன்னல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் ஜன்னல் பறந்ததை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு விமானம் புறப்பட்டபோது இந்த விபரீதம் நிகழ்ந்தது. இந்த நிலையில், விமானத்தில் இருந்து ஜன்னல் உடைந்து விழும் போது பலத்த சத்தம் ஏற்பட்டது. அந்த சத்தம் கேட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.
மேலும் 16,000 அடி உயரத்தில் ஜன்னல் வெடித்து சிதறியதாக விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சேனதன் பேட்ஸ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "பேரன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் ஒன்றை கண்டெடுத்தேன். இந்த ஐபோன் பிளைட் மூட் ஆக்டிவேஷனில் இருந்தது. 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அப்படியே உள்ளது" என்று கூறியுள்ளார். 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தும் போன் எந்த ஒரு சேதாரமுமின்றி, நல்ல முறையில் இருப்பது உலக அளவில் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.