வீர் தாஸ், ஏக்தா கபூர் சாதனை.. இந்தியாவுக்கு 2 சர்வதேச எம்மி விருதுகள்


வீர் தாஸ், ஏக்தா கபூர் சாதனை.. இந்தியாவுக்கு 2 சர்வதேச எம்மி விருதுகள்
x

நகைச்சுவை பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார்.

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று இரவு 51வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டாண்ட்அப் காமெடியன் வீர் தாஸ், சிறந்த காமெடிக்கான எம்மி விருது பெற்றார்.

சிறந்த காமெடி பிரிவில் நெட்பிளிக்சின் "வீர் தாஸ்: லேண்டிங்" என்ற காமெடி நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. "டெர்ரி கேர்ள்ஸ் சீசன்-3" என்ற பிரிட்டிஷ் காமெடி தொடருடன் இந்த விருதை வீர் தாஸ் பகிர்ந்துகொண்டார்.

இதன்மூலம், காமெடி பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார். இந்த விருதை அவர் தனது நாட்டிற்காக சமர்ப்பித்துள்ளார்.

விருது பெற்றது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த வீர் தாஸ், இதற்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய காமெடிக்குமான மைல்கல் என்றும் கூறினார்.

'எனது அணி மற்றும் நெட்பிளிக்ஸ் இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்த விருது எனது பணிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு கதைகள் மற்றும் குரல்களின் கொண்டாட்டம்' என்றும் வீர் தாஸ் குறிப்பிட்டார்.

இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏக்தா கபூருக்கு சர்வதேச எம்மி இயக்குநரக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Next Story