கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை


கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை
x

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிஷ்கேக்,

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தின் சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து கிர்கிஸ்தான் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். அவசர தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் எண் வழங்கியுள்ளோம். 0555710041 என்ற எண்ணில் மாணவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இந்திய தூதரகத்தின் மேற்கண்ட பதிவை மறுபகர்வு செய்து, "பிஷ்கேக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனை கண்காணித்து வருகிறேன். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களை தீவிரமாக அறிவுறுத்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

சில மருத்துவ பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. சில சமூகவலைதள வீடியோக்களில் பாகிஸ்தான் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அங்கு பயிலும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிஷ்கேக்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகளில் பாகிஸ்தானை சேர்ந்த பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தான் மாணவர்கள் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஊடக பதிவுகள் இருந்தபோதிலும், இதுவரை எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விடுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்கள் வசிக்கின்றனர்.

நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை பாகிஸ்தான் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வன்முறையானது பாகிஸ்தானியர்கள் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் எதிராக இருந்தது." என குறிப்பிட்டுள்ளது.

கிர்கிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட வன்முறையில் வெளிநாட்டு மாணவர்கள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story