அமெரிக்காவில் ரூ.174 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 27 ஆண்டுகள் சிறை


அமெரிக்காவில் ரூ.174 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 27 ஆண்டுகள் சிறை
x

அமெரிக்காவில் ரூ.174 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியான மினாள் படேலுக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்திய வம்சாவளியான மினாள் படேல் (வயது 44) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கால்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறிவைத்து தொடர்பு கொண்டனர். அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் டாக்டர்களின் கையெழுத்தை பெற அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.

அந்தவகையில் கடந்த 2016-2019 காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான போலியான மருத்துவ பரிசோதனைகளை இந்த நிறுவனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன்மூலம் சுமார் ரூ.174 கோடி வரை படேல் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவரது சொத்து பறிமுதல் வழக்கு வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


Next Story