ஊழியரை அடித்து துன்புறுத்திய வழக்கு அமெரிக்காவில் இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு


ஊழியரை அடித்து துன்புறுத்திய வழக்கு அமெரிக்காவில் இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு
x

Photo Credit: Reuters 

அமெரிக்காவில் ஊழியரை அடித்து துன்புறுத்திய வழக்கில் இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதி ஹர்மன்பிரீத் சிங் (வயது 30), குல்பீர் கவுர் (42). இவர்கள் அங்குள்ள வடக்கு செஸ்டர்பீல்ட் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹர்மன்பிரீத் தனது உறவுக்காரர் இளைஞர் ஒருவரை தனது சூப்பார் மார்க்கெட்டில் வேலைக்கு அமர்த்தினார். ஆரம்பத்தில் கேசியர் என கூறி இளைஞரை பணியமர்த்திய ஹர்மன்பிரீத்-குல்பீர் தம்பதி சூப்பர் மார்க்கெட்டின் அனைத்து வேலைகளையும் அந்த இளைஞரையே செய்ய வைத்துள்ளனர்.

அதோடு அவரை சூப்பர் மார்க்கெட்டிலேயே தங்க வைத்து, சரியாக உணவு கொடுக்காமல் அதிகப்படியான வேலையை கொடுத்தனர். வேலை செய்ய மறுத்தபோது அவரை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி வேலை வாங்கினர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த சித்ரவதையை அனுபவித்த அந்த இளைஞர் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து, போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் ஹர்மன்பிரீத்-குல்பீர் தம்பதி மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக வடக்கு செஸ்டர்பீல்ட் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹர்மன்பிரீத்-குல்பீர் தம்பதி மீது தொழிலாளியை அடித்து துன்புறுத்துதல், கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் உள்பட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story