உலகின் சிறந்த இடங்கள் 2023 பட்டியலில் இடம் பிடித்த இந்திய நகரங்கள்...


உலகின் சிறந்த இடங்கள் 2023 பட்டியலில் இடம் பிடித்த இந்திய நகரங்கள்...
x

அரிய வகை புலிகள், பழமையான கோவில்கள் உள்பட பல விசயங்களுக்காக உலகின் சிறந்த இடங்கள் 2023 பட்டியலில் இரு இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.



வாஷிங்டன்,


உலகின் சிறந்த இடங்கள் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்டியலை டைம் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. உலக அளவில் சிறந்த சுற்றுலா தலங்களுக்கான மொத்தம் 50 இடங்கள் கொண்ட பட்டியலில், இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.

அவை மயூர்பாஞ்ச் மற்றும் லடாக் ஆகியவை ஆகும். இந்த பட்டியலில் இரு நகரங்களும் இடம் பிடித்ததற்கான காரணங்களையும் அவற்றுக்கான முகப்பு பக்கங்களில் டைம் நாளிதழ் இடம் பெற செய்துள்ளது.

லடாக்:

இதன்படி, உயர்ந்த மலைப்பாங்கான நில அமைப்புகள், திபெத்திய புத்த கலாசாரம், உள்ளிட்ட பல விசயங்களை கொண்டு உள்ள லடாக் நகரம், வட இந்தியாவின் மிக தொலைதூர பகுதியில் அமைந்து, அடிக்கடி வந்து போக கூடிய பல ஆச்சரியம் நிறைந்த விசயங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




லடாக்கின் தலைநகராக லே நகரம் உள்ளது. இதற்கு தென்கிழக்கே 168 மைல்கள் தொலைவில் ஹான்லே கிராமம் அமைந்து உள்ளது. நாட்டின் முதல் இருண்ட வானுக்கான சரணாலயம் என்ற பெருமையை ஹன்லே கிராமம் பெற்று உள்ளது.

ஏனெனில், இது செயற்கை ஒளியில் இருந்தும், அதன் மாசுபாட்டில் இருந்தும் விடுபட்ட கிராமம் என்ற பெருமையை பெற்று உள்ளது. இதில் ஆண்டு ஒன்றுக்கு 270 நாட்கள் இரவு தெளிவாக இருக்கும்.

லடாக்கில் இருக்கும்போது, நூப்ரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கியாகர் ஓட்டல், லே நகரில் ஷெல் லடாக் மற்றும் தோல்கார் பகுதியில் தங்கி கொள்ளலாம் என பரிந்துரையும் செய்து உள்ளது.





மயூர்பாஞ்ச்:

டைம் நாளிதழில் இடம் பெற்ற 2-வது இந்திய நகரம் மயூர்பாஞ்ச் ஆகும். பசுமையான நிலப்பகுதிக்கு பெயர் பெற்ற, கலாசார வளம் நிறைந்த மற்றும் பழமையான கோவில்களை கொண்டது இந்நகரம்.

ஒடிசாவில் அமைந்துள்ள இந்நகரம் பூமியில் வேறு பகுதிகளில் பார்க்க முடியாத அரிய வகை கருப்பு புலிகளை கொண்டது. புகழ் பெற்ற சிமிலிபால் தேசிய பூங்கா தவிர, மாவட்டத்தில் பல சிறப்புக்குரிய விசயங்கள் உள்ளன.

வருகிற ஏப்ரலில், பிரசித்தி பெற்ற மயூர்பாஞ்ச் சாவ் என்ற நடன திருவிழா நடைபெற உள்ளது. அது யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலிலும் உள்ளது. பெருந்தொற்றுக்கு பின்னர் மிக பெரிய அளவில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த சாவ் நடன திருவிழாவில், பழமையான தற்காப்பு கலைகள் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சி நடத்தப்படும்.

இதற்காக தி பெல்கேடியா அரண்மனை, சிறந்த வசதிகள் கொண்ட ஓட்டல் மற்றும் அரச மாளிகை ஆகியவை தயாராக உள்ளது என குறிப்பிட்டு உள்ளது. ஒடிசா முழுவதுமே திகைக்க வைக்கும் வகையிலான பல்லுயிர் சூழல் மற்றும் நீண்டகால பாரம்பரிய சூழல் காணப்படுகிறது.

அதன் தலைநகர் புவனேஸ்வரில் வழிகாட்டியுடன் கூடிய நடந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், ஒடிசா வாக்ஸ் என்ற பெயரிலான ஒரு புதிய நடைபயண சுற்றுலாவும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பழமையான கலாசார ஸ்தலங்கள், பல நூற்றாண்டுகளை கடந்த, செதுக்கப்பட்ட விசயங்களை கொண்ட பாதுகாக்கப்பட்ட கற்பாறைகள், கோவில் கட்டிட கலை ஆகியவையும் உள்ளன என தெரிவித்து உள்ளது.

ஒரு புதிய மற்றும் பரவசமூட்டும் அனுபவங்கள் கிடைப்பதற்கான சிறந்த சுற்றுலா தலங்களை அந்த பட்டியல் கொண்டு உள்ளது. கடந்த ஆண்டு, உலகின் சிறந்த இடங்கள் 2022-ம் ஆண்டுக்கான டைம் நாளிதழின் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் ஆமதாபாத் ஆகியவை இடம் பிடித்து இருந்தன.


Next Story