ஐ.நா.கவுன்சிலில் காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் புகாருக்கு இந்தியா பதிலடி!


ஐ.நா.கவுன்சிலில் காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் புகாருக்கு இந்தியா பதிலடி!
x
தினத்தந்தி 4 Jun 2022 10:29 AM IST (Updated: 4 Jun 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது.

மேலும், இந்த கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் இனப் படுகொலையை யாரும் மறக்க முடியாது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

சர்வதேச சட்ட விதிமீறல் விவகாரங்களில் நீதியை நிலைநாட்டுவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் பிரதிநிதி ஆமீர்கான் பேசும்போது, ''காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த பகுதியை இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது'' என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து, இதில் ஐ.நா.வுக்கான இந்திய துாதரக குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பட் பேசியதாவது:-

50 ஆண்டுகளுக்கு முன்னர், தற்போது வங்கதேசமாக உள்ள கிழக்கு பாகிஸ்தானில் சொந்த மக்கள் என்றும் பாராமல் அவர்களை இனப்படுகொலை செய்த அவமான சரித்திரத்தின் உதாரணமாக பாகிஸ்தான் உள்ளது.

அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.இந்த கொடிய செயலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை; வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் போரில் ஆயுதங்களாக நடத்தப்பட்டனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக், என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக நீடிக்கும். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் அடங்கும். இதை எந்த நாடும் மறுக்க முடியாது. ஜம்மு - காஷ்மீர் குறித்து, ஐ.நா.வில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதே பாகிஸ்தானால் செய்யக்கூடிய ஒரே பங்களிப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story