உக்ரைன் - ரஷியா மோதல் அதிகரிப்பது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது: வெளியுறவு அமைச்சகம்
உக்ரைன் - ரஷியா மோதல் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
புதுடெல்லி,
உக்ரைன் - ரஷியா மோதல் குறித்த கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
உக்ரைன் ரஷியா மோதல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து, இந்த போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி அவர் பேசினார். வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
உக்ரைனில் உள்கட்டமைப்பு மீதான கொடூர தாக்குதல் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து, மோதல் அதிகரிப்பு குறித்து இந்தியா "ஆழ்ந்த கவலை" கொண்டுள்ளது. சண்டை நிறுத்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது.
போர்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம். அரசாங்க உறவு மற்றும் பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அனைத்து தேசங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகிய கொள்கைகளில் உலகளாவிய ஒழுங்கு ஆணை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து ரஷியா இன்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஏவுகணை மூலமாக குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனின் பல நகரங்கள் மீது 75 ஏவுகணைகளை ஏவியது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷிய தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, ஜி7 நாடுகள் அமைப்பு, நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.