துபாயில் இந்து கோவில் திறப்பு- ஐக்கிய அரபு அமீரக மந்திரி திறந்து வைத்தார்
துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
துபாய்,
துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும்.
இதை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன.
இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது கோவில் நிர்வாகம்.தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.
துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிச்லை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.
ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.