இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அணுமின் நிலையங்களை குறிவைக்க வாய்ப்பு: ஐ.நா. கவலை
மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.
பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையே நேரடி போர் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.
டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தியது. இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஈரான் தரப்பில் இருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.
ஒருவேளை இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைக்கலாம் என கூறப்படுகிறது. ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், இதுகுறித்து கவலைப்படுவதாகவும் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் குரோஷி கூறி உள்ளார்.
இதுஒருபுறமிருக்க, இஸ்ரேல் செய்த தவறுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டதாகவும் ஈரான் கூறி உள்ளது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்தால், ஈரானின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
எனவே, இனி இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வைப் பொருத்து இரு நாடுகளுக்கிடையே நேரடி போர் மூளுமா? அல்லது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.