அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப், விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்


அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப், விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்
x

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.

2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி, ஜோ பைடன் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

ஆனால் அப்போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் கூடி பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அன்று அரங்கேறிய வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை தூண்டியது டிரம்ப்தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவில் ஆளும் ஜனநாயகக்கட்சியின் 7 எம்.பி.க்களும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் 2 எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர்.

டிரம்புக்கு சம்மன்

இந்த விசாரணைக்குழு முன்னிலையில் அடுத்த மாதம் 14-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டிரம்புக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

அந்த சம்மனில் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் செய்திராத வகையில், தேர்தலை முறியடிக்கிற முதல் முயற்சிக்கு நீங்கள் காரணமாக இருந்தீர்கள். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக நீங்கள் நியமித்த நபர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் மோசடி நடந்துள்ளது என்னும் உங்கள் குற்றச்சாட்டினை 60-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகள் நிராகரித்துள்ளன. சட்டபூர்வமான பிற எதிர்ப்புகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த நடவடிக்கைகளை (கலவரம்) நீங்கள் எடுத்துள்ளீர்கள். தேர்தல் தொடர்பான உங்கள் கருத்துகள் தவறானவை. ஜனாதிபதி என்னும் முறையில் உங்கள் கடமை இருந்தபோதும், நமது நாட்டின் சட்டங்கள் உண்மையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆஜராகாவிட்டால்?

இந்த விசாரணைக்காக டிரம்ப் ஆவணங்களை வழங்குவதற்கு அடுத்த மாதம் 4-ந் தேதி வரையில் அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்த சம்மன்படி, டிரம்ப் நேரில் விசாரணைக்காக ஆஜராகாவிட்டால் அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால், இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின்வசம் ஒப்படைக்கப்படும். இது அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழி நடத்தும்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் இப்படி சம்மன் அனுப்பி அதன்படி விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், டிரம்ப் ஆலோசகரான ஸ்டீவ் பேனனுக்கு, நாடாளுமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாத சிறைத்தண்டனையும், 6,500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.

டிரம்பின் உதவியாளரான பீட்டர் நவரோ, இதே போன்ற சம்மனுக்கு ஒத்துழைக்க மறுத்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளார்.

அடுத்த மாதம் 8-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கலவர வழக்கில் டிரம்ப் நேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


Next Story