கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு சிறையில் பாலியல் தொல்லை - இம்ரான் கான் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்
இம்ரான்கான் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்புவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் 'தெக்ரிக்-இ-இன்சப்' கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டார். தற்போது இம்ரான்கான் ஜாமினில் உள்ளார்.
இம்ரான்கானை கைது செய்ததை கண்டித்து மே 9ஆம் தேதி போராட்டம் நடத்திய கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு சிறையில் பாலியல் தொல்லை அளிக்கபடுவதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா இம்ரான்கானின் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில்,"இம்ரன்கான் கட்சியினர் பேசிய ஒரு ஆடியோ அழைப்பு எங்களிடம் உள்ளது, அதில் அவர்கள் பொய்யான தகவல்களை பரப்ப திட்டமிட்டுள்ளார், அவர்கள் அனைத்தையும் திட்டமிட்டு நாடகமாடி வருகின்றனர். விரைவில் அந்த ஆடியோ வெளியிடப்படும்" என தெரிவித்தார்.
தெக்ரிக்-இ-இன்சப்' கட்சி நிர்வாகி கூறுகையில், "அந்த பெண்களை வெளியே விட்டால் அவர்கள் உண்மைகளை தெரிவித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்துறை அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அரசு ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. அவர்கள் இதை எவ்வாறு சமாளிப்பது என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் இதை 'தெக்ரிக்-இ-இன்சப்' கட்சி செய்ததாக கூறுகின்றனர்" என்று அவர் கூறினார்.