சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு; ஆனாலும் சிறையில் அடைப்பு
சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இம்ரான் கான் 2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக, ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த ஆண்டு முதல் சிறையில் உள்ள அவரை, சில வழக்குகளில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இவை தவிர அவருக்கு எதிராக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்பட பல்வேறு வழக்குகள் தீர்க்கப்படாமல் இருந்தன.
எனினும், அவற்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், இம்ரான் கான் (வயது 71) மற்றும் பூஷ்ரா பீபி (வயது 49) தம்பதிக்கு எதிரான சட்டவிரோத திருமண வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த ஒரே ஒரு வழக்கிற்காக அவர் கடந்த ஆண்டில் இருந்து சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அந்த தம்பதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டின் நீதிபதி அப்சல் மஜோகா, வழக்கில் இருந்து இம்ரான் கானை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
அவர்கள் இருவரும் வேறு எந்த வழக்கிலும் தேவைப்படவில்லை என்றால், உடனடியாக சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
எனினும், தோஷகானா ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மே 9-ந்தேதி நடந்த வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் இம்ரான் கானை கைது செய்வதற்கு வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் இம்ரான் கானை கைது செய்வதற்கான ஒப்புதலை, லாகூரில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதனால், சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்டபோதும், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால், தொடர்ந்து அவர் சிறையிலேயே இருப்பார்.
இதுபற்றி அவருடைய கட்சியினர் கூறும்போது, இம்ரான் கானை நீண்டகாலம் வரை சிறையில் சட்டவிரோத வகையில் அடைத்து வைப்பதற்கான தந்திரம் இது என தெரிவித்து உள்ளனர்.