சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து


சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து
x

கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அண்மையில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பலரும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில், கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.

கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் மாநில எல்லைகளை கடந்து செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான தண்டனைகளுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிப்பது, கருக்கலைப்பு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகள் இந்த நிர்வாக உத்தரவில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கருக்கலைப்புக்கு தடை அமலில் உள்ள மாகாணங்களில் இந்த நிர்வாக உத்தரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கருக்கலைப்பு உரிமையை முழுமையாக மீட்டெடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது அவசியம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


Next Story