இவர் யாரென தெரிகிறதா...? கலைஞரின் கற்பனை வடிவம்


இவர் யாரென தெரிகிறதா...? கலைஞரின் கற்பனை வடிவம்
x

துருக்கி நாட்டை சேர்ந்த கலைஞர், மறைந்த இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என கற்பனை வடிவம் கொடுத்துள்ளார்.


இஸ்தான்புல்,


துருக்கி நாட்டை சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ். இவர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தனது கற்பனையை தட்டி விட்டுள்ளார்.

இதன் முயற்சியாக, அவர் வரைந்த உருவங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்த பிரபலங்களுக்கு சில பெரிய விசயங்கள் (மரணம்) நடந்திருக்காவிட்டால், அவர்கள் இன்று எப்படி காணப்படுவார்கள் என்ற கேள்வி இந்த படைப்புக்கு பின்னால் உள்ளது. இதுபற்றிய உங்களது பார்வைகள் மற்றும் விமர்சனங்கள், ஆலோசனைகளை வழங்குங்கள் என்றும் ஆல்பர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ஓவியத்தில் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கருப்பு, வெள்ளை நிறத்தில் தலை நிறைய முடியுடன், சிரித்தபடி காணப்படுகிறார். அவரது உடலில் வயது முதிர்வுக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. தோல் சுருக்கம் விழுந்து காணப்படுகிறது.

இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்ற புகைப்படம் ஒன்றையும் அவர், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தி உருவாக்கி உள்ளார். அதில், டயானா அதே மெலிந்த தேகம், வெண்ணிற தலை முடியுடன் காணப்பட்டாலும், சற்று வயது முதிர்வுக்கான தோல் சுருக்கங்களுடனும் அவர் காணப்படுகிறார்.

இதுதவிர, ஹீத் லெட்ஜர், பால் வாக்கர், ஜான் லென்னான், எமி ஒயின்ஹவுஸ் மற்றும் பிரெட்டீ மெர்குரி உள்ளிட்ட சிலரது புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story