ரஷியர்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர் புதின்.. காரணம் இதுதான்!
அடுத்த ஆண்டு 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியை குறைக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடுவது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதின், தன்னிடம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார். பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்ததால் உடனடியாக மன்னிப்பு கேட்டார் புதின்.
"இந்த விலை உயர்வுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும்" என புதின் தெரிவித்தார்.
ரஷியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கடந்த மாத (நவம்பர்) நிலவரப்படி ஒட்டுமொத்த பணவீக்கம் 7.4 சதவீதமாக இருந்தது. இது இன்னும் உயர்ந்து 8 சதவீதமாக ஆகலாம் என புதின் தெரிவித்திருந்தார். இது மத்திய வங்கி நிர்ணயித்திருந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பல்வேறு வர்த்தக தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அடுத்த ஆண்டு 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியை குறைக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் முட்டை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.