நிர்கதியற்று தவிக்கும் காசா மருத்துவமனை... மொத்தமாக புதைக்கப்பட்ட 179 சடலங்கள்


நிர்கதியற்று தவிக்கும் காசா மருத்துவமனை... மொத்தமாக புதைக்கப்பட்ட 179 சடலங்கள்
x

ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதை வலையமைப்பின் மேல் அல் ஷிபா மருத்துவமனை அமைந்திருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரின் உச்சகட்டமாக வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை.

வெளியுலக தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. மருத்துவமனைக்கான எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில், நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினர். குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனைகளையும், நோயாளிகளையும் கேடயங்களாக பயன்படுத்துவதால் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தரப்பு குற்றம்சாட்டி உள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதை வலையமைப்பின் மேல் அல் ஷிபா மருத்துவமனை அமைந்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் நிர்கதியற்ற நிலையில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை கிட்டத்தட்ட திகில் மாளிகை போல் காட்சியளிக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட 179 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை இயக்குனர் அபு சல்மியா வேதனையுடன் தெரிவித்தார்.

காசாவில் பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடி உள்ளதாக கூறிய அவர், இறந்தவர்களை ஒரே குழியில் புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார்.

இந்த நிலைமை மனிதாபிமானமற்றது என்றும், மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு இல்லை என்றும் டாக்டர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அல் ஷிபா மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இருக்கலாம் என ஐ.நா. சபை கணித்துள்ளது. கடுமையான சண்டை நடப்பதால் அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் இருக்கலாம் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.


Next Story