இங்கிலாந்து நாட்டில் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோரில் அதிகம் பேர் இந்துக்கள்
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆரோக்கியத்தில் இந்துக்கள் அசத்தல்
அதன்பதிவுகளின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகைக்கான பல்வேறு துணைப்பிரிவில் தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மூலம் மதம் என்ற தலைப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வருமாறு:-
ஆரோக்கியம் என எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்தமாக 82 சதவீதத்தினர் நன்றாக உள்ளனர். ஆனால் இந்துக்களில் இந்த ஆரோக்கிய விகிதம் 87.8 சதவீதமாக உள்ளது. ஒட்டு மொத்த கல்வி விகிதத்தில், நிலை 4 மற்றும் அதற்கு மேலும் (சான்றிதழ் நிலை) படித்தவர்கள் எண்ணிக்கை 33.8 சதவீதம் ஆகும். ஆனால் இந்துக்களில் இது 54.8 சதவீதம் ஆகும்.
சீக்கியர்கள் சொந்த வீடுகளில் அபாரம்
சொந்த வீடுகள் என்று எடுத்துக்கொண்டால், அதிகபட்சமாக சீக்கியர்களில் 77.7 சதவீதத்தினர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதத்தைத் தெரிவிப்பது சுய விருப்பத்தைப் பொறுத்ததுதான். இங்கிலாந்தில் 94 சதவீதத்தினர் தங்கள் மதத்தைத் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையை விட கிறிஸ்தவர்கள் ஆரோக்கியம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சொந்த வீடுகளில் வாழ்வோரில் 36 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையான 27.1 சதவீதத்தை விட அதிகம். சராசரியாக 51 வயதானவர்கள், இன்னும் அடமானம் அல்லது கடனுக்கான தொகையை திருப்பிச்செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே வெளியான முந்தைய புள்ளி விவரம், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கையில் பாதிக்கும் கீழாக குறைந்து விட்டதைக் காட்டியது. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மக்கள் தொகை அதிகரித்து இருந்ததும் தெரிய வந்தது.