அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் கார் பேரணி...!
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
வாஷிங்டன்,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அமெரிக்காவில் கார் பேரணி நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் இந்து மதத்தினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தப்பட்டது. 216 கார்களில் இந்தியா, அமெரிக்கா மற்றும் காவிக்கொடிகளுடன் இந்து மதத்தினர் நூற்றுக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
ஹியூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் தொடங்கிய பேரணி 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து செல்லும் வழியில் உள்ள 11 கோவில்களை கடந்து ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோவிலில் நிறைவடைந்தது. 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்துடன் பேரணி நடைபெற்றது.