ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி அளித்த நபர் வான்வழி தாக்குதலில் படுகொலை
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை நாசர் யாகூப் ஜாபர் என்பவர் அளித்து வந்திருக்கிறார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
6 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து, இஸ்ரேல் காசாவின் ரபா நகரில் போரை தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்து வந்தவரான நாசர் யாகூப் ஜாபர் என்பவர் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.
இவர் ரபா நகரில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை அளித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பரில் மட்டுமே அவர், லட்சக்கணக்கான டாலர்களை வழங்கி இருக்கிறார்.
இதுதவிர, கடந்த சில நாட்களாகவே, வடக்கு காசாவின் ஷிஜெயா பகுதியில் இஸ்ரேல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் பயிற்சி மையம் ஒன்றும் அழிக்கப்பட்டது.
கடந்த 24 மணிநேரத்தில், மத்திய காசா பகுதியில், ஹமாஸ் அமைப்பின் தளங்களை வான், தரை மற்றும் கடல்படை வழியே சென்று இஸ்ரேல் தாக்கி உள்ளது.