எச்-1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்: இந்திய மாணவர்கள்- அலுவலர்களுக்கு வரப்பிரசாதம்
புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கும், வேலை தேடிச் செல்வோருக்கும் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இது 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலைநீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி விசாவை புதுப்பிக்க வேண்டும்.
எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். இத்தகைய சிறப்புள்ள விசாவை புதுப்பிப்பதற்காக அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலையை அமெரிக்கா தற்போது மாற்றி அமைத்துள்ளது.
அமெரிக்காவிலேயே அங்குள்ள தூதரகம் சென்று விசாவை புதுப்பிக்க வழி செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க தூதரக மூத்த அதிகாரி நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் அதிபர் பைடனை சந்திக்க இருந்த நிலையில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
'அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் சமூகமாக மாறும் வேகத்தில் இந்தியர்கள் உள்ளனர்' என்று அந்த அதிகாரி கூறினார். அமெரிக்கா, கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு 1 லட்சத்து 25,000 விசாக்களை வழங்கியது, இது ஒரு சாதனையாகும். இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 20 சதவீத அதிகமாகும்.
இந்த விசாவை புதுப்பிக்கும் புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கும், வேலை தேடிச் செல்வோருக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.