பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்
பிரேசில் நாட்டில் ராணுவ உடையில் ஆயுதமேந்திய நபர் 2 பள்ளி கூடங்களில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
பிரேசிலியா,
பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். அராகுரூசில் உள்ள 2 பள்ளி கூடங்களில் கோழைத்தன தாக்குதல் நடந்துள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தி, விரைவில் புதிய விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.
எனினும், தாக்குதல் நடத்திய நபருக்கு 16 வயது இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் ஆகிய இரு கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த இரட்டை தாக்குதலுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார்.